பார்வை இழப்பைத் தடுக்கும் முயற்சியில் புதிய வெற்றி


பார்வை இழப்பைத் தடுக்கும் முயற்சியில் புதிய வெற்றி
x
தினத்தந்தி 6 May 2017 7:43 AM GMT (Updated: 2017-05-06T13:13:32+05:30)

செயலிழந்து வரும் விழித்திரையில் உள்ள செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ணத் திரவத்தைப் பயன்படுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்படும்.

‘குளுக்கோமா’ என்ற கண் நீர் அழுத்த நோய் அபாயத்தை மிகவும் சீக்கிரமாகவே கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், நிரந்தரமாகப் பார்வையிழப்பு ஏற் படுவதற்குக் காரணமாக இருக்கும் குளுக்கோமாவால் கண் பார்வை குறையத் தொடங்கும் முன்பே, அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுதொடர்பான ஆராய்ச்சியில் புதிய பரிசோதனை முறையை உருவாக்கியிருப்பதாக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கண் பரிசோதனை முறை மூலம், பார்வைக் குறைபாடு தெரிய ஆரம்பிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குளுக்கோமா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

செயலிழந்து வரும் விழித்திரையில் உள்ள செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ணத் திரவத்தைப் பயன்படுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்படும்.

ஆரம்பகட்டமாக இது 16 நபர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டது. இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குளுக்கோமாவால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 6 கோடிப் பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், மூன்றில் ஒரு பகுதி பார்வையிழந்த நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

கண்ணுக்குள் உண்டாகும் அழுத்தத்தால் ஏற் படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் உள்ள நரம்பு மண்டலங்கள் சேதமடைந்துவிடுகின்றன.

அழுத்தம் காரணமாக அந்தச் செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, தடிமனாகி, அவை எந்த வரையறைக்குள் இருக்க வேண்டுமோ அதை விட்டு வெளியே வரத் துவங்கிவிடுகின்றன.

ஒளிரும் சாயத்திரவங்கள் அவற்றைத்தான் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அவை, விழியின் ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன.

அதன்பிறகு, கண் சிகிச்சை நிபுணர் செய்ய வேண்டிய பணி, கண்களின் பின்பக்கத்தைப் பரிசோதிப்பது ஆகும். விழித்திரை, வெள்ளைப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தால், குறிப்பிட்ட நபருக்குப் பிரச்சினை இருப்பதை அறியலாம்.

புதிய சிகிச்சை முறைகள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நடத்தப்பட்ட முதல்கட்டப் பரிசோதனை முறைகளில், ஆரோக்கியமான கண்ணுக்கும் குளுக்கோமாவால் பாதிக்கப்பட்ட கண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இது முக்கியமான வெற்றி என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், அடுத்தகட்ட ஆய்வைத் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

Next Story