கீரிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 35 பேர் காயம்

ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 35 பேர் காயம் அடைந்தனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி முக்கோணம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கரூர், பெரம்பலூர், நாமக்கல், மதுரை, திருச்சி, தேனி மாவட்டங்களில் இருந்தும் 500–க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தன. ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 600–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டில் முதலில் சாமி மாடு வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அப்போது காளைகள் சீறிப்பாய்ந்து மைதானத்திற்குள் துள்ளிக்குதித்து ஓடின. அவற்றை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்க முயன்றனர். அவர்களிடம் சிக்காமல் பல காளைகள் பாய்ந்து ஓடிவிட்டன.
ஜல்லிக்கட்டின் போது வீரர்களை உற்சாகப்படுத்த தங்கக்காசு, வெள்ளிபொருட்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மாடுகளை அடக்கிய வீரர்கள் பரிசுகளை வென்றனர்.
35 பேர் காயம்இந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் நாகியம்பட்டியை சேர்ந்த சத்தியராஜ்(வயது 28), நாரைகிணறு விக்னேஷ்(22), பூலாம்பாடி சஞ்சீவி(20), கோவிந்தராஜபாளையம் பரத்குமார்(32), கீரிப்பட்டி ரமேஷ்(24), செந்தில்(42), செந்தாரப்பட்டி சுரேஷ்(29), கடம்பூர் சுரேஷ்குமார்(24), சேசன்சாவடி கண்ணன்(28) ஆகியோர் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீரிப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஜல்லிக்கட்டை காண ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து இருந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி 100–க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.