தொடரும் சம்பள பிரச்சினை: வால்பாறையை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் தோட்ட தொழிலாளர்கள்


தொடரும் சம்பள பிரச்சினை: வால்பாறையை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் தோட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 6 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-07T03:31:23+05:30)

தொடரும் சம்பள பிரச்சினை காரணமாக வால்பாறையை விட்டு தேயிலை தோட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 12,678 ஹெக்டர் பரப்பளவில் தேயிலையும், 4,517 ஏக்கர் பரப்பளவில் காபியும், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஊடுபயிராக குருமிளகு உள்ளிட்ட பணப் பயிர்களும் பயரிடப்பட்டு உள்ளன. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களாக தற்போது 22 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் வால்பாறை பகுதி தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.235.70 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வால்பாறைக்கு மிக அருகில் உள்ள கேரள மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.312.42 வழங்கப்பட்டு வருகிறது.

சம்பள பிரச்சினை

எனவே தற்போதுள்ள விலைவாசி மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.500 வரை உயர்த்தி வழங்க கோரி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், த.மா.கா. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் மற்றும் வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியவை சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனாலும் தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க வில்லை. எனவே பல்வேறு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றன.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. ஆனாலும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பள பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த தொழிலாளர் நலத்துறையும், தோட்ட அதிபர்கள் சங்கமும் முன்வரவேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வில்லை. மேலும் இது தொடர்பாக எந்த ஒரு முன் முயற்சியும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் மேற்கொள்ளப்பட வில்லை.

இதனால் நம்பிக்கை இழந்த தோட்ட தொழிலாளர்கள் வால்பாறையை விட்டு குடும்பத்துடன் வெளியேற தொடங்கி உள்ளனர்.

இது குறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:–

குடும்பத்துடன் வெளியேறுகின்றனர்

வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படுவது இல்லை. சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும் என்று பல முறை எதிர்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது. தினக்கூலியாக வழங்கப்படும் ரூ.235.70–ஐ வைத்துக் கொண்டு தற்போது உள்ள விலைவாசியில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே லாரி உள்ளிட்ட வாகனங்களில் வீட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு, வால்பாறையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வெளியேறுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இருக்கிற தொழிலாளர்களை தக்க வைக்க வேண்டுமானால் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் தோட்ட தொழிலை விட்டு பலரும் வெளியேறுவதை தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story