தேனி மாவட்டத்தில் வறட்சியால் 2,500 ஏக்கர் தென்னை மரங்கள் காய்ந்தன நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு


தேனி மாவட்டத்தில் வறட்சியால் 2,500 ஏக்கர் தென்னை மரங்கள் காய்ந்தன நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2017 11:14 PM GMT (Updated: 6 May 2017 11:14 PM GMT)

தேனி மாவட்டத்தில் வறட்சியால் சுமார் 2,500 ஏக்கரில் தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேனி,

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்த வறட்சியால் தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தென்னை மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் தேனி, கோட்டூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடி, பெரியகுளம், ஜெயமங்கலம், தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்பட பல இடங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வறட்சி நிவாரணம் ஒதுக்கீடு செய்த போது, தேனி மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

2,500 ஏக்கரில் தென்னை மரங்கள் காய்ந்தன

தேனி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் அளவில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.72 லட்சம் நிவாரணம் கேட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. ஆனால் இன்னும் நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட தலைவர் கண்ணன் கூறியதாவது:–

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் மாவட்டம் முழுவதும் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்து உள்ளன. ஆனால், சுமார் 1,000 ஏக்கருக்கு தான் நிவாரணம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பட்டுப்போன மரங்கள் தவிர, சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் காய்ப்பு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. காய்ப்பு திறன் இழப்பும் விவசாயிகளுக்கு பாதிப்பு தான். இந்த கோடையில் மழை பெய்யாவிட்டால், மேலும் லட்சக்கணக்கான மரங்கள் பட்டுப்போக வாய்ப்பு உள்ளது’ என்றார்.


Next Story