குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் 10 ஆழ்துளை கிணறுகள்


குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் 10 ஆழ்துளை கிணறுகள்
x
தினத்தந்தி 6 May 2017 11:26 PM GMT (Updated: 2017-05-07T04:56:05+05:30)

திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் 10 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட இருக்கிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரில் 2¼ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது காமராஜர் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது.

இதனால் அங்குள்ள உறைகிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. எனினும், திண்டுக்கல் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை. எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் ரூ.1¼ கோடிக்கு திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

10 ஆழ்துளை கிணறுகள்

இதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கி உள்ளது. அதில் ஒருகட்டமாக ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக 10 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.

பின்னர் அந்த 10 ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுத்து சோதனை செய்யப்படும். அதில் மக்கள் குடிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் இருந்தால், குடிநீராக வினியோகம் செய்யப்பட உள்ளது. அதற்காக 10 ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் மின்மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து மொத்தமாக ராட்சத தொட்டியில் நிரப்பப்படும்.

பின்னர் அதில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு திண்டுக்கல் நகருக்கு கொண்டு வந்து மக்களுக்கு வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story