வந்தார்.. வழிநடத்தினார்.. வென்றார்..


வந்தார்.. வழிநடத்தினார்.. வென்றார்..
x
தினத்தந்தி 7 May 2017 6:57 AM GMT (Updated: 2017-05-07T12:27:31+05:30)

இந்திய கடற்படையில் சேர்ந்த ஐந்தாம் ஆண்டிலே, மிக அற்புதமான வாய்ப்பை பெற்றிருக்கிறார், அபர்ணா நாயர். குடியரசு தின நாளில் டெல்லியில் நடந்த சிறப்புவாய்ந்த ராணுவ அணிவகுப்பில் கடற்படை சார்பில் 144 வீரர்கள் பங்குபெற்றார்கள்.

ந்திய கடற்படையில் சேர்ந்த ஐந்தாம் ஆண்டிலே, மிக அற்புதமான வாய்ப்பை பெற்றிருக்கிறார், அபர்ணா நாயர். குடியரசு தின நாளில் டெல்லியில் நடந்த சிறப்புவாய்ந்த ராணுவ அணிவகுப்பில் கடற்படை சார்பில் 144 வீரர்கள் பங்குபெற்றார்கள். தலைமை ஏற்று அவர்களை வழிநடத்திச் சென்றவர் இளம் அதிகாரி அபர்ணா நாயர்.

“என் வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருந்தது, ஜனவரி 26-ந் தேதி! அதுவரை நான் ஒரு கடற்படை அதிகாரியாக மட்டும்தான் இருந்தேன். அன்று இந்திய ராணுவத்தின் திறனை உலகிற்கு பறைசாற்றும்விதத்தில் அமைந்த ராணுவ அணிவகுப்பில், முதல் வரிசையில் கம்பீரமாக நான் நடந்து சென்றேன். அப்போது கிடைத்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

எனது சிறுவயது பருவத்தில் டெலிவிஷனில் குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனை பேராலும் துல்லியமாக அடியெடுத்துவைத்து, இசைக்குதக்கபடி எவ்வாறு நடந்து செல்ல முடிகிறது என்பதை நினைத்து பிரமித்திருக்கிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை 6 பேர் சேர்ந்து அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். பலமுறை ஒத்திகை பார்த்தும், மேடையில் நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது எங்கள் நடையில் சின்னச்சின்ன கோளாறுகள் உருவாகிவிட்டது. அதனால்தான் ராணுவ அணிவகுப்பு எனக்கு மலைப்பை ஏற்படுத்தியது.

நான் ராணுவத்தில் சேர்ந்ததும் அதற்கு விடைகிடைத்தது. ராணுவத்தில் கிடைக்கும் திட்டமிட்ட, துல்லியமான, மிக கடினமான பயிற்சிதான் அதற்கு காரணமாக இருக் கிறது.

குடியரசு தின அணிவகுப்பிற்கான கடற்படை அணியில் இடம் பெற நானும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் கடந்த நவம்பர் மாதம் எனக்கு கிடைத்தது. நான் 2015-ம் ஆண்டிலே அணிவகுப்பில் இடம்பெற்றிருந்ததால் எனக்கு அந்த அனுபவம் ஏற்கனவே கிடைத்திருந்தது.

கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் இருந்து 160 வீரர் களையும், 8 அதிகாரிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது, அந்த அணி. அதில் இருந்து 144 பேரை தேர்ந்தெடுப்பதாக கூறியிருந்தார்கள். பயிற்சிகாலத்து திறமைகளின் அடிப்படையில் 8 அதிகாரிகளில் இருந்து 4 பேரை அணி வகுப்பை நடத்திச்செல்ல தேர்ந்தெடுப்பார்கள். அவர் களில் ஒருவரை பிளட்டூன் கமாண்டராக தேர்வு செய்வார்கள். இந்திய கடற்படையின் சக்தியை உலகமே வியப்புடன் பார்க்கிறது. அணிவகுப்பில் அந்த பிரிவை வழி நடத்திச்செல்வது பிளட்டூன் கமாண்டர்தான்!” என்று கூறும், அபர்ணா நாயர், அணிவகுப்பிற்காக தான் பெற்ற கடுமையான பயிற்சிகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

“எங்களுக்கு ஒடிசாவில் உள்ள சில்கு பகுதியில் ஒன்றரை மாதம் பயிற்சி தந்தார்கள். கடுமையான பயிற்சிகள் என்றாலும் நாங்கள் தளர்ந்துபோகவில்லை. அதற்கு காரணம் எங்களுக்குள் இருந்த கடமை உணர்வுதான். தினமும் அதிகாலை 4 மணிக்கு விழிப்போம். 8 மணி வரை முதல் கட்ட பயிற்சி நடக்கும். பின்பு 10 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் பயிற்சிகள் நடந்தது. தினமும் 21 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நடந்துசெல்ல வேண்டும். கனமான பூட்ஸ் அணிந்திருப்போம். இரண்டு சாக்ஸ் அணிந்து, பேண்டேஜ் போட்டு அதற்கு மேல் பூட்ஸ் அணிவோம். ஆனாலும் மாலை நேரத்தில் பூட்சை கழற்றும்போது கால்கள் வலிக்கும். நீர்கோர்த்திருக்கவும் செய்யும். உப்பு கலந்த சுடுநீரில் கால்களை முக்கிவைத்து பின்பு மசாஜ் செய்வோம். பயிற்சி காலத்தில் உணவுக்கட்டுப்பாடும் இருந்தது.

டிசம்பர் மாதம் டெல்லி வந்தோம். சில்குவில் நல்ல வெயில். டெல்லியில் அப்போது கடுங்குளிர். ஆனாலும் அதிகாலையிலே எழுந்து பயிற்சிகள் பெற்றோம். அணி வகுப்பை நினைத்தாலே மனதுக்குள் போராட்ட உணர்வு வரும். அது அனுபவிக்கவேண்டிய மகிழ்ச்சியான அனுபவம்” என்கிறார், அபர்ணா நாயர்.

இவர் பயிற்சியின்போது, பிளட்டூன் கமாண்டர் ஆகக் கூடிய அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வரும் என்று நினைத்துப் பார்த்திருக்கவேயில்லை.

“என் முழுத் திறமையையும் காட்டி பயிற்சி பெற்றேன். எனது சீனியர் அதிகாரிகள் இருவரும், என் சக அதிகாரி ஒருவருமாக நாங்கள் நான்கு பேர் இறுதிகட்ட தேர்வில் இருந்தோம். குடியரசு தின அணிவகுப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நான் பிளட்டூன் கமாண்டராக தேர்வான தகவல் தெரிந்தது. மகிழ்ச்சியடைந்தேன். கூடவே அந்த பொறுப்பை நிறைவேற்றும் டென்ஷனும் ஏற்பட்டது. ஆனால் எத்தகைய டென்ஷனில் இருந்தும் உடனே மீளும் பயிற்சியை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று கூறும் அபர்ணா நாயர் குடியரசு தினத்தன்று நடந்த அணிவகுப்பில் இடம்பெற்றதை குறிப்பிடுகிறார்.

“விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரையுள்ள 14 கி.மீ. தூரம் குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கும். 26-ந் தேதி அதிகாலையிலே விஜய் சவுக் சென்றோம். கேலரி நிறைய மக்கள் குழுமியிருந்தார்கள். தேசிய கொடியை அசைத்து உற்சாகமாக குரல் எழுப்பத் தொடங்கினார்கள்.

அணிவகுத்து சென்று கொண்டிருக்கும்போது நான் சத்தமாக குரல் எழுப்பி கட்டளைகள் பிறப்பிக்கவேண்டும். அந்த சத்தம் அணிவகுப்பில் இறுதியில் வருபவருக்குகூட கேட்கவேண்டும். தொண்டையில் இருந்து சத்தம் வந்தால் கேட்காது. அந்த சத்தம் மனதில் இருந்து எழவேண்டும். நடக்க தொடங்கும்போது உயர்த்திப் பிடிக்கும் வாளை, அணிவகுப்பு முடியும் வரை தூக்கிப் பிடித்திருக்கவேண்டும். ‘நான் அபர்ணா நாயர் என்ற தனி மனுஷி அல்ல. இந்திய கடற்படை என்னும் மகாசக்தியின் பிரதிநிதி’ என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தினேன்.

முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி சல்யூட்டை ஏற்றுக்கொள்ளும் பகுதியை கடந்து செல்லும் ஒரு நிமிடம் மிக முக்கியமானது. கூடியிருந்த மக்களின் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் ஏற்றதுபோல் அன்று சிறிது நேரம் சாரல் மழையும் பெய்தது.

இறுதியில் செங்கோட்டையின் முற்றத்தில் போய் அணிவகுப்பு நின்றபோது 14 கி.மீ. நடந்த சோர்வு ஒன்றும் தோன்றவில்லை. டெலிவிஷனில் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பெற்றோர் அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னேன். பாட்டும், நடனமுமாக அந்த அனுபவம் நிறைவடைந்தது” என்கிறார்.

அபர்ணா நாயர் கேரளாவில் தலைச்சேரி பகுதியை சேர்ந்தவர். இவரது பெற்றோர்: தமோதரன்-ஆசிரியை ஆஷாலதா. சகோதரன் அவினாஷ்.

சிறுவயதில் அபர்ணா, தாயை போன்று ஆசிரியையாகவே விரும்பியிருக்கிறார். ஆனால் என்ஜினீயரிங் படித்திருக்கிறார். அடுத்து கடற்படை அதிகாரிக்கான தேர்வில் எழுதி, இந்த பதவியை அடைந்திருக்கிறார். தேச நலன்காக்க பெருமளவு பெண்கள் இந்த பதவிக்கு வரவேண்டும் என்றும் விரும்புகிறார்.

Next Story