தலைமாற்று அறுவை சிகிச்சையின் ஒத்திகை !


தலைமாற்று அறுவை சிகிச்சையின் ஒத்திகை !
x
தினத்தந்தி 10 May 2017 4:15 PM GMT (Updated: 10 May 2017 7:46 AM GMT)

‘எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்று கூறிச்சென்றுள்ளனர் நம் முன்னோர்.

அதாவது, நம் உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் என உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பல பாகங்கள் இருந்தாலும் மூளையை பாதுகாத்து நிற்கும் சிரசு அல்லது தலை என்ற பாகமே அதி முக்கியமானது. ஏனென்றால், தலைபாகம் இல்லை என்றால் உடலின் பாகங்கள் அனைத்தும் செயல்பட்டாலும் கூட மனித உடல் முழுமையாக இயங்காது.

இதயம் நுரையீரல் போன்ற உடல் பாகங்களை ஒருவரிடமிருந்து எடுத்து உயிரியல் ஒற்றுமை உள்ள மற்றொருவருக்கு பொருத்துவது முன்பை விட தற்போது பல மடங்கு சுலபமாகிவிட்டது. ஆனாலும், உடலின் தலைமைச் செயலகமான மூளையை ஒருவரிடமிருந்து எடுத்து மற்றொருவருக்கு பொருத்த முடியுமா என்று கேட்டால், அதற்கான தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.

உதாரணமாக, மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளிக்கு உடலின் மற்ற அனைத்து பகுதிகளும் நன்றாக செயல்படும் பட்சத்தில், உடலின் முக்கிய பாகங்கள் அனைத்தும் முற்றிலும் செயலிழந்துவிட்ட அல்லது இறுதி நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும், ஆனால் மூளை மட்டும் நன்றாக செயல்படும் நிலையில் உள்ள ஒரு நோயாளியின் மூளையை மட்டும் எடுத்து முன்னவருக்கு பொருத்தினால் அவரை உயிர் பிழைக்கச் செய்யலாம்.

சமீபத்தில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு எலியின் தலையை துண்டித்து எடுத்து அதனை மற்றொரு எலியின் தலையுடன் வெற்றிகரமாக இணைத்துள்ளனர். முக்கியமாக, அந்த எலியானது பல மணி நேரங்கள் இயல்பாக உயிர் வாழ்ந்ததையும் நிரூபித்து உலகை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளனர்.

இத்தகைய ஆய்வுகள் கடந்த 1900 ஆண்டு தொடங்கி 1950 ஆண்டு வரை பல விஞ்ஞானிகளால் முயற்சிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதெல்லாம் சரி, ஒரு தலையை மற்றொரு தலையுடன் இணைத்து தலையோடு விளையாடும் இந்த விஞ்ஞான விளையாட்டின் நோக்கம்தான் என்ன?
இத்தகைய ஆய்வுகளின் இறுதிகட்ட நோக்கம் தலைமாற்று அறுவை சிகிச்சைதான். ஆனால், இந்த சீன ஆய்வில், தலைமாற்று அறுவை சிகிச்சை செய்யும் முன்பு ஒரு தலையை, அதிலுள்ள மூளையை துண்டித்து எடுக்கும்போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பினால் மூளை பாதிப்படையாமல் பாதுகாத்து மற்றொரு உடலுடன் இணைக்க முடியுமா என்பதைக் கண்டறிவதுதான் நோக்கமாக இருந்தது.

அவர்களின் நோக்கமும் ஈடேறியது. எப்படி என்று கேட்டால், தலையை துண்டித்து எடுக்கும் முன்னர், இரண்டு எலிகளின் ரத்த நாளங்களை இணைத்துவிட்டனர். அதன்மூலம் ரத்த ஓட்டமானது இரண்டு எலிகளின் உடலிலும் தடை இல்லாமல் ஓடியது. அதன் காரணமாக, துண்டித்து எடுத்த மூளை பாதிப்படையாமல் மற்றொரு எலியின் தலைக்கு மேல் வைத்து அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடல் பாக மாற்று அறுவை சிகிச்சையில், விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் ஒரு மைல்கல்லாக கருதப்படும் இந்த ஆய்வு வெற்றியடைந்து தலை மாற்று சிகிச்சை சாத்தியப்படும் பட்சத்தில், தசை மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்படுவோர் அனைவரையும் உயிர் பிழைக்கச் செய்ய முடியும் என்கின்றனர்.

தலைமாற்று சிகிச்சை ஒருவரின் உயிரைக் காக்கும் என்று கூறும் அதேசமயம், சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் பொருத்தப்பட்ட புதிய தலையில் இருந்து உடலில் கலக்கும் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் உள்ளிட்ட இதர உயிரியல் காரணிகள், புதிய உடலில் மற்றும் மனதில் எத்தகைய மாற்றத்தை, உளவியல் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த எந்த புரிதலும் இல்லை என்பது ஒரு அதிர்ச்சி கலந்த உண்மை என்றும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

Next Story