பணி வழங்குவதில் பாரபட்சம்: டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை கப்பலூர் சிட்கோ பேட்டையில் மதுரை தெற்கு பிரிவு டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனை மையமாக கொண்டு 138 மதுக்கடைகள் இயங்கி வந்தன. இந்தநிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேசிய நெடுச்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் இயங்கி வந்த கடைகள் மூடப்பட்டன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றி வந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என 400–க்கும் மேற்பட்டோர் கடந்த 5 வாரத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்குமுன் 10–க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதில் பணி மூப்பு அடிப்படை இன்றி அரசின் விதிக்கு அப்பாற்பட்டு டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம், பணி வழங்கி ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.
உள்ளிருப்பு போராட்டம்இதை கண்டித்தும், பாரபட்சமின்றி அரசு உத்தரவுபடி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று கப்பலூர் டாஸ்மாக் குடோனில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டக்காரர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
கோரிக்கைஇதுகுறித்து, தொ.மு.ச. மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி சங்க மாநில துணைத்தலைவர் பாலசந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது,
கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும் விற்பனை குறையவில்லை. சாதாரணமாக ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையான அதே கடையில் தற்போது ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த இடங்களில் அரசின் உத்தரவின்படி பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை கண்டு கொள்ளாமல் ஒரு தலைபட்சமாக நிர்வாகம் செயல்படுகிறது என்றனர்.
மதுரை தெற்கு பிரிவு மண்டல மேலாளர் பாலசுப்பிரமணி கூறும்போது, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மனுக்களை பெற்று கடைக்கு தகுந்தாற்போல பணியாளர்களை நியமித்து வருகிறோம். கடைகள் இல்லாதபோது ஒரே நேரத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் பணி நியமனம் செய்ய வாய்ப்பு இல்லை என்றார்.