முத்தூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
முத்தூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் கிராம பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தூர்,
தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 164 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர்–காங்கேயம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடை முத்தூர் அருகே உள்ள காந்திநகர் செட்டிகாட்டுத்தோட்டம் பகுதியில் மாற்றி அமைக்க பணி தொடங்கப்பட்டு தற்போது கட்டிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
2 இடங்களில் மறியல்இந்த நிலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள செட்டிகாட்டுத்தோட்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காந்திநகர், வெங்கமேடு, ரங்கப்பையன்காடு, சக்கரபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முத்தூர்–காங்கேயம் மெயின்ரோடு, நத்தக்காடையூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று கூடி திடீரென்று ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
பின்னர் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டம் செய்த பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு முத்தூர் கடைவீதிக்கு சென்று காலை 11 மணியளவில் ரோட்டில் அமர்ந்தும், மனித சங்கிலி போல் கைகளை கோர்த்து கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
பேச்சுவார்த்தைஇது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து செட்டிகாட்டுத்தோட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டல துணை தாசில்தார் ஜெகதீஸ்குமார், வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பார்த்தீபன், ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்புஇதில் செட்டிகாட்டுத்தோட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்ற பொதுமக்களின் எதிர்ப்பை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் முத்தூர் கடைவீதியில் சுமார் 1 மணி நேரமும், நத்தக்காடையூர் ரோடு பிரிவில் சுமார் அரை மணி நேரமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.