கள்ளக்குறிச்சி பகுதியில் இடி–மின்னலுடன் மழை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் காயம்


கள்ளக்குறிச்சி பகுதியில் இடி–மின்னலுடன் மழை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் காயம்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 11 May 2017 11:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி–மின்னலுடன் மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று மதியம் 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு, குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 3.45 மணிக்கு இடி– மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 4.45 மணி வரை பெய்தது. பின்னர் தூறிக் கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

சிறுவன் காயம்

இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டை மின்னல் தாக்கியது. அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் செந்தில் மகன் சுந்தர்சிங் (வயது 7) பலத்த காயம் அடைந்தான். அவனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த போது சுந்தர்சிங் மட்டுமே வீட்டுக்குள் இருந்தான். செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வராண்டாவில் இருந்ததால் அவர்கள் காயமின்றி தப்பினர்.

இதேபோல் தியாகதுருகம், பெரியமாம்பட்டு, வடதொரசலூர், கோவிந்தசாமிபுரம், சின்னமாம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் மாலை 5.15 மணி முதல் 5.45 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது.


Related Tags :
Next Story