புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை


புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 11 May 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஈரோடு,

சத்தியமங்கலம் போக்குவரத்து கழக பணிமனை அருகே சத்தியமங்கலம்–புஞ்சைபுளியம்பட்டி ரோட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடை புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரப்பாளையத்தில் ஜல்லித்தோட்டம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை நடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் ஜல்லித்தோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.

டாஸ்மாக் கடை மூடப்பட்டது

இதற்கிடையே மதியம் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். ஆனால் பொதுமக்களின் முற்றுகை போராட்டம் காரணமாக டாஸ்மாக் கடையை திறக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் டாஸ்மாக் நிர்வாக மாவட்ட முதன்மை மேலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட மேலாளர் லியாகத், சத்தியமங்கலம் தாசில்தார், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களிடம் டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘6 மாத காலம் அவகாசம் கொடுங்கள். பின்னர் டாஸ்மாக் கடையை மூடி விடுகிறோம்,’ என்று தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை கண்டிப்பாக மூடியே ஆகவேண்டும் என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததுடன் அதில் இருந்த மதுபாட்டில்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்து சென்றனர். டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு 2.30 மணி அளவில் கடை மூடப்பட்ட பிறகே பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சத்தியமங்கலம்


இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதற்காக அங்கு ஒரு கடையை டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த கடைக்கு தேவையான மதுபாட்டில்கள் அனைத்தும் சரக்கு ஆட்டோ மூலம் கொண்டு வரப்பட்டு நேற்று பகல் 11 மணி அளவில் இறக்கி வைக்கப்பட்டன. இதுபற்றி அந்த பகுதியில் தகவல் பரவியது. தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு பகல் 11.30 மணிக்கு புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பேச்சுவார்த்தை


இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கடையை கண்டிப்பாக திறக்கக்கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். உடனே போலீசார் இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதாக பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மதியம் 12.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story