செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் பலத்த மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி,
செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழைநெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு 8.30 மணி முதல் 9.45 மணி வரை பலத்த மழை பெய்தது. இதில் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த பழமையான ஆலமரம் நேற்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலமரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த மழையால் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரிப்புதென்காசி சாலையில் சாக்கடை நீர் நிறைந்து ஓடியது. நேற்று அதிகாலை சுமார் 3 மணி வரை தூறல் விழுந்துகொண்டே இருந்தது. இந்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து நேற்று காலையில் இருந்து அதிகரித்தது. இதனை கேள்விப்பட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.
கடையத்தில் வீடுகள் சேதம்கடையம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் மழையுடன் சூறாவளி காற்று வீசியதில், கடையம் அருகிலுள்ள முத்துபாஞ்சான் பரும்பு பகுதியில் உள்ள 12 வீடுகளின் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தன.