குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் ராஜீவ்காந்தி நகர் உள்ளது. இங்கு 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
பெரம்பலூர்,
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் ராஜீவ்காந்தி நகர் உள்ளது. இங்கு 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினரிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, இக்குடியிருப்பிற்கு சற்று தொலைவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே சென்று குடிநீர் பிடித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி நகர் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பெரம்பலூர்–எளம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ஆலயமணி, ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் ஓரிரு நாட்களில் தனி குழாய் அமைத்து, ராஜீவ்காந்தி நகருக்கு குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.