புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் தடியடி


புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் தடியடி
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

துறையூர்,

கோர்ட்டு உத்தரவின் பேரில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகள் கிராமப்புறங்களில் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த அம்மாப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மங்களாபுரத்தில் கடந்த 5-ந் தேதி புதிதாக ஒரு மது பானக்கடை திறக்கப்பட்டது.

இங்கு காமாட்சி புரம், அஸ்வினி நகர், சண்முகா நகர், மங்களா கார்டன், முகமதியா நகர், புதிய வீட்டு வசதி வாரியம் போன்ற குடியிருப்புகளும், பள்ளிக்கூடங்களும், கோவில் களும் அமையப்பெற்றுள்ளதால் இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இ்ந்த போராட்டத்தில் அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட தலைவர் ரிங்கராணி, புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, லால்குடி ஒன்றிய செயலாளர் கோமதி, துறையூர் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் நிர்மலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போலீசார் தடியடி

இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் தாசில்தார் சந்திரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். உடனே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று துறையூர்-திருச்சி சாலையில் இருபுறமும் கற்களை போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் செய்தனர்.

இதையடுத்து மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக மங்களாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது57), மாதர் சங்க நிர்வாகி மல்லிகா உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story