நண்பரின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் உணவில் சயனைடு கலந்து வாலிபரை கொன்றேன் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


நண்பரின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால்  உணவில் சயனைடு கலந்து வாலிபரை கொன்றேன் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 7:12 PM IST)
t-max-icont-min-icon

நண்பரின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் உணவில் சயனைடு கலந்து வாலிபரை கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள செலமாரம்பட்டி சோமலிங்கப்பா ஏரியில் கடந்த மாதம் 23 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபர் காரிமங்கலம் அருகே உள்ள சே‌ஷப்பநாயுடு கொட்டாயை சேர்ந்த பூவரசன் (வயது25) என்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையில் போலீசார் காரிமங்கலத்தில் பாலக்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் பொன்னம்மாபேட்டை மஜீத் தெருவை சேர்ந்த கதிரு என்கிற அர்த்தனாரி (42) என்பதும், பூவரசன் கொலை வழக்கில் தொடர்பு உள்ளவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அர்த்தனாரியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:–

பாலியல் தொந்தரவு

நான் வேலை எதுவும் செய்யாமல் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தேன். என்மீது ஒரு கொலை மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக நான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது காரிமங்கலம் சே‌ஷப்பநாயுடு கொட்டாய் பகுதியை சேர்ந்த பிலால் (45) என்பவர் எனக்கு சிறையில் நண்பரானார். நாங்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தோம்.

அப்போது பிலால், தனது தங்கைக்கு அதே பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறான். இதுகுறித்து அவனிடம் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை. அவனை ஏதாவது செய்ய உன் உதவி தேவை என்று கூறினார். இதனால் நாங்கள் 2 பேரும் பூவரசனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி மார்ச் மாதம் 31–ந்தேதி பிலால் பூவரசனை காரிமங்கலம் அருகே உள்ள ஏரிக்கு அழைத்து வந்தார். அங்கு நாங்கள் 3 பேரும் சேர்ந்து மது குடித்தோம். பூவரசனுக்கு போதை அதிகமானதும் சயனைடை சாப்பிடுவதற்காக வாங்கி வந்த கழி உணவில் கலந்து கொடுத்தேன்.

சிறையில் அடைப்பு

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவன் இறந்து விட்டான். அதன் பின்னர் நான் சேலம் வந்துவிட்டேன். பிலால் கேரளா சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலால் நாமக்கல் ஜே.எம்–2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் என்னை பற்றி போலீசாரிடம் சொல்லி விடுவார் என பயந்து காரிமங்கலம் வந்து நோட்டமிட்டேன். அப்போது நான் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து போலீசார், அர்த்தனாரியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த பிலாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story