கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் சாவு வீட்டில் விளையாடியபோது பரிதாபம்
கிருஷ்ணகிரியில் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கொசப்பேட்டை காலனியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஸ்வினி. இவர்களுக்கு பாலகிருஷ்ணன் (வயது 4) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது, அஸ்வினி வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அந்த நேரம் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் கீழே இருந்த சுவிட்ச் பாக்சில் கையை வைத்துள்ளான். அப்போது சிறுவனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தான்.
பரிதாப சாவுஇதனிடையே கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த அஸ்வினி, தனது மகன் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.