நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண்ணின் தந்தை நிறுத்தச்சொன்னதால் வேதனை


நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண்ணின் தந்தை நிறுத்தச்சொன்னதால் வேதனை
x
தினத்தந்தி 13 May 2017 3:45 AM IST (Updated: 12 May 2017 11:36 PM IST)
t-max-icont-min-icon

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண்ணின் தந்தை நிறுத்தச்சொன்னதால்

விழுப்புரம்,

விழுப்புரம் காகுப்பம் பாதையை சேர்ந்தவர் தங்கராசு மகன் ராமச்சந்திரன் (வயது 32), நகைத்தொழிலாளி. இவர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திருமண அழைப்பிதழ்களுடன் வந்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று ராமச்சந்திரனை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினார்கள். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். தொடர்ந்து, அவரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகளிடம் போலீசார் அழைத்துச்சென்றனர்.

திருமணத்தை நிறுத்த...

அப்போது ராமச்சந்திரன் கூறுகையில், எனக்கும் கடலூர் தாலுகா கே.என் பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 29–ந் தேதி விழுப்புரத்தில் திருமணம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம், பெண்ணின் தந்தை, என்னை அழைத்து திருமணத்தை உடனடியாக நிறுத்தச்சொன்னார். இதனைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எனக்கு கடன் அதிகமாக இருப்பதாகவும், அவரது மகளை நான் சரியாக பார்த்துக்கொள்ள மாட்டேன் என்றும், இதனால் திருமணத்தை நிறுத்தியதாக கூறினார். தற்போது திருமணத்தை நிறுத்தத்சொன்னதால் எனது குடும்பத்தினர் மிகவும் கவலையில் உள்ளனர். எனவே மனவேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக கூறினார். மேலும் அந்த பெண்ணுடன் தனக்கு திருமணத்தை நடத்தி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இதற்கு போலீசார், இதுசம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

வழக்குப்பதிவு

மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபட்டதால் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story