29–ந் தேதி ஆழித்தேரோட்டம்: திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்


29–ந் தேதி ஆழித்தேரோட்டம்: திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 13 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வருகிற 29–ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்,

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோ‌ஷ பரிகார தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை திருவாரூர் தேருக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருக்க 4 வீதிகளில் வீதி உலா வரும் அழகு பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இந்த ஆண்டு வருகிற 29–ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது. அதனுடன் சண்டிகேஸ்வரர், கமலாம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. முன்னதாக 28–ந் தேதி விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர் அலங்கரிக்கும் பணிகள் காரணமாக கீழவீதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


Next Story