கர்நாடகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது எஸ்.எஸ்.எல்.சி.யில் 67.87 சதவீதம் பேர் தேர்ச்சி


கர்நாடகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது எஸ்.எஸ்.எல்.சி.யில் 67.87 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 3:00 AM IST (Updated: 13 May 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. எஸ்.எஸ்.எல்.சி.யில் 67.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. எஸ்.எஸ்.எல்.சி.யில் 67.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக உயர்நிலை கல்வி தேர்வாணைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் 30–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12–ந் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரத்து 286 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். தேர்வு முடிவடைந்ததை அடுத்து 225 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. 68 ஆயிரத்து 129 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

67.87 சதவீதம் பேர் தேர்ச்சி

இதில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 134 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 67.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 75.11 ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி சுமார் 7 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது. மாணவர்கள் 62.42 சதவீதம் பேரும், மாணவிகள் 74.08 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தேர்ச்சி விவரங்களை பார்க்கும்போது, நகர்ப்புறங்களில் 72.18 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 74.12 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். கன்னட வழியில் படித்தவர்கள் 62.47 சதவீதம் பேரும், ஆங்கில வழியில் படித்தவர்கள் 78.94 சதவீதம் பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 46.54 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

924 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

முதல் மொழியில் 3,232 பேரும், 2–வது மொழியில் 2,371 பேரும், 3–வது மொழியில் 9,757 பேரும், கணிதத்தில் 1,458 பேரும், அறிவியலில் 491 பேரும், சமூக அறிவியலில் 2,953 பேரும் முழு மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். அதாவது முதல் மொழியில் 125–க்கு 125–ம், மற்ற பாடங்களில் 100–க்கு 100 மதிப்பெண்களும் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மொத்தத்தில் 20 ஆயிரத்து 262 பேர் முழு மதிப்பெண்களை எடுத்து உள்ளனர்.

268 அரசு பள்ளிகளும், 44 அரசு மானியம் பெறும் பள்ளிகளும், 612 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 924 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 5 அரசு பள்ளிகளும், 4 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 51 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பூஜ்ஜியம் ஆகும். அதாவது அந்த பள்ளிகளில் படித்தவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் மறுமதிப்பீடு

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வருகிற 22–ந் தேதி கடைசி நாள் ஆகும். மறுகூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.150–ம், விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.300–ம் கட்டணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு, அவற்றின் நகல் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்திற்கு கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெங்களூரு ஒன், கர்நாடக ஒன் மையங்களில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் வசதிக்காக துணைத்தேர்வு ஜூன் மாதம் 15–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை நடைபெறும். இதற்கு தேர்வு கட்டணம் செலுத்த வருகிற 22–ந் தேதி கடைசி நாள் ஆகும். துணைத்தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு கட்டணமாக ரூ.240, 2 பாடத்திற்கு ரூ.290, 3 பாடம் மற்றும் அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு ரூ.390 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிறவர்க்கம்–1 மாணவ–மாணவிகள் இந்த கட்டணம் செலுத்த தேவை இல்லை.

இவ்வாறு மந்திரி தன்வீர்சேட் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி.யில் கடந்த 10 ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் விவரம்

1. 2008 – 66.37 சதவீதம்

2. 2009 – 70.22 சதவீதம்

3. 2010 – 66.81 சதவீதம்

4. 2011 – 73.90 சதவீதம்

5. 2012 – 76.13 சதவீதம்

6. 2013 – 77.47 சதவீதம்

7. 2014 – 81.20 சதவீதம்

8. 2015 – 81.82 சதவீதம்

9. 2016 – 75.11 சதவீதம்

10. 2017 – 67.87 சதவீதம்


Next Story