கணபதி பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கணபதி பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 13 May 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

கணபதி பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கணபதி,

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தமிழகத்திலும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசு கிராமபுறங்களிலும், குடியிருப்புகள் அருகிலும் புதிதாக மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் கோவை கணபதி நியூ முல்லைநகரில் புதிதாக மதுக்கடை அமைக்க அரசு இடம் தேர்வு செய்ததாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அரசு தேர்வு செய்ததாக கூறப்படும் இடத்தின் முன்பு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இதேபோல் கோவை வீரகேரளத்தில் இருந்து வேடப்பட்டி செல்லும் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், மீனாட்சி, டாஸ்மாக் துணை மேலாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் கூறுகையில், இந்த கடை விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படும். அதுவரை கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story