மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி?


மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி?
x
தினத்தந்தி 13 May 2017 5:30 AM IST (Updated: 13 May 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி? என்பது குறித்து நிபுணர்கள் நேற்று பாதுகாப்பு ஒத்திகை.

சென்னை,

சென்னையில், 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை) மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக கோயம்பேடு – பரங்கிமலை இடையேயும், 2–வது கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 3–வது கட்டமாக திருமங்கலம் – நேரு பூங்கா இடையே (7.63 கிலோ மீட்டர் தூரம்) சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. இதற்கான விழா, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகை

இந்த சுரங்க வழித்தடத்தில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன. சுரங்கப் பாதையில் ரெயிலில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதால், இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில், சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் வரும்போது, திடீரென பழுதாகி நின்றாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டாலோ, எப்படி பாதுகாப்பாக பயணிகள் வெளியேற முடியும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நேற்று திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

புகை மூட்டம் வெளியேற்றம்

இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங், இயக்குனர் (கணினி செயல்பாடு) நரசிம்ம பிரசாத், இணை பொது மேலாளர் (சுரங்கப்பாதை காற்றோட்டம்) ஹரி பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு, ஊடகத்தினருக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

முதலில், சுரங்கப்பாதையில் செயற்கையாக தீ மற்றும் புகைமூட்டம் ஏற்படுத்தப்பட்டது. உடனே, அப்பகுதியில் உள்ள ‘சென்சார்’ கருவி, அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தது. உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள நிபுணர்கள், அங்கிருந்தபடியே பொத்தானை அழுத்தி தண்ணீரை பீய்ச்சி அடிக்க செய்து தீயை அணைத்தனர். தொடர்ந்து, ராட்சத மின்விசிறிகளை இயங்கச் செய்து புகை மூட்டத்தை வெளியேற்றினர். 3 முதல் 4 நிமிடங்களில் அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

பின்னர், இதுகுறித்து தலைமை பொது மேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–

பயப்படத் தேவையில்லை

சுரங்கப்பாதையிலோ அல்லது அந்த வழியாக வரும் மெட்ரோ ரெயிலிலோ தீவிபத்து ஏற்பட்டால், பயணிகள் பயப்படத் தேவையில்லை. உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விபத்து கண்காணிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில நிமிடங்களிலேயே அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பும்.

இதற்காக, ஒவ்வொரு சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்திலும், 8 வென்டிலே‌ஷன் மின்விசிறிகளும், 4 இடங்களில் புகையை வெளியேற்றும் வென்டிலே‌ஷன் சாப்ட்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 250 மீட்டர் இடைவெளியில், ஒரு சுரங்கப்பாதையில் இருந்து அருகில் உள்ள மற்றொரு சுரங்கப்பாதைக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வாயு செலுத்தப்படும்

ஏதாவது, ஒரு காரணத்தினால் மெட்ரோ ரெயில் நடுவழியில் நின்றால், பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி, சுரங்கத்தில் ஓரமாக போடப்பட்டுள்ள நடைபாதையில் நடந்து சென்று அருகில் உள்ள ரெயில் நிலையத்தை அடைய முடியும். சுரங்கப்பாதையில், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவின் அளவு கண்காணிக்கப்படுகிறது. அவை குறைந்தால், உடனடியாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்படும். எனவே, மூச்சுத் திணறல் ஏற்படும் என்று யாரும் பயப்படத் தேவையில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கப்பாதை வழித்தடத்தில் சென்டிரல் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.   

Next Story