சோளிங்கர் அருகே துணிகரம் டாஸ்மாக் கடையில் ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை


சோளிங்கர் அருகே துணிகரம் டாஸ்மாக் கடையில் ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 14 May 2017 3:45 AM IST (Updated: 13 May 2017 6:16 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள்

சோளிங்கர்,

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அருகே நெடுஞ்சாலையில் செயல்பட்ட டாஸ்மாக் கடை, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பையடுத்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் இவ்வாறு மூடப்பட்ட கடைகளுக்கு வேறு இடம் தேர்வு செய்து அவற்றை மீண்டும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வாறு மூடப்பட்ட கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும்வரை அதில் உள்ள மதுபாட்டில்கள் பழைய கட்டிடத்திலேயே இருக்கும். இடம் தேர்வு செய்தபின்னர்தான் மதுபாட்டில்கள் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படும். அதன்படி கொடைக்கல் பகுதியில் மூடப்பட்ட கடையிலேயே மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர்.

போலீசார் விசாரணை

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிடப்பட்டிருந்தது குறித்து கடையின் விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாஸ்மாக் அலுவலர்கள் அங்கு வந்து பார்த்து விட்டு திருட்டு நடந்ததை உறுதி செய்து கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடையின் சுவரில் ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு இந்த திருட்டு நடந்துள்ளதை கண்டறிந்தனர். கடையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததாகவும், அதில் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மட்டுமே திருடப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. திருடர்கள் யார் என்பது குறித்து கண்டறிய தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். அதன்படி திருடர்கள் யார் என்பது குறித்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story