திருஉத்தரகோசமங்கை கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் கழிவுநீரை கலக்கக்கூடாது பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை திருக்கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் கழிவுநீரை கலக்கக்கூடாது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ளது திருஉத்தரகோசமங்கை கோவில். இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி அம்மன், மற்றும் அபூர்வ மரகத நடராஜர் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலின் முன்புறம் 6 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த குளத்தின் சுற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்ததோடு, தேர் பவனி, வீதிஉலா உள்ளிட்ட கோவில் நிகழ்ச்சிகளின்போதும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக பக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதுதவிர, சாலையின் வெளிப்பகுதியில் சமையல் செய்தல், குப்பைகளை கொட்டுதல், கடைகளின் பொருட்களை அடுக்கி வைத்தல், கட்டுமான பொருட்களை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்புகளின் பிடியில் குளத்தின் சுற்றுப்பகுதி சிக்கி இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
எச்சரிக்கை
இதன்படி நேற்று காலை கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் தலைமையில் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ரோஜா மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுதவிர, அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கழிவுநீரை பிரம்மதீர்த்த குளத்தில் கலக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களை எச்சரித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி உத்தரகோசமங்கை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.