ராஜபாளையத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ராஜபாளையம் பகுதியில் மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால், பொதுமக்கள்
ராஜபாளையம்,
தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த 36 கடைகளில் தற்போது 16 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அடைக்கப்பட்ட கடைக்கு பதிலாக நகராட்சிக்கு உட்பட்ட டி.பி.மில்ஸ் சாலையோரம் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை கடந்த 6–ந்தேதி திறக்கப்பட்டது. அப்பகுதியை சுற்றி குடியிருப்புகள், குழந்தைகள் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில், விசைத்தறி கூடம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மற்றும் ரெயில் நிலையமும் உள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால், விசைத்தறி மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள், கோவிலுக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த கடையை இடம் மாற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று காவல் துறை அதிகாரிகளின் உறுதி அளித்த பின்னர் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மீண்டும் திறப்புஇந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த நெசவாளர்கள் பகுதியை சேர்ந்த 40 பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் டாஸ்மாக் கடையை 2–வது முறையாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை மூட வலியுறுத்தி கடை நுழைவு வாயிலில் அமர்ந்தபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பொதுமக்கள் வெகு நேரம் போராட்டம் நடத்தியும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
சாலை மறியல்இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின்னர் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஊர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை கலெக்டரிடம் மனுவாக அளிக்கும் பட்சத்தில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.