காரிமங்கலம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள் 80 பேர் கைது


காரிமங்கலம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள் 80 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 9:56 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் கடையை சூறையாடினர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அண்ணாமலைஅள்ளி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கடையை அகற்ற வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்து வந்து வெளியே போட்டு உடைத்தனர். மேலும் கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

தர்ணா போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையின் முன்பு பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், தாசில்தார்கள் அதியமான், கண்ணன், காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ஆகியோரும் வந்தனர். அவர்கள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பெண் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சுற்றி வளைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

80 பெண்கள் கைது

இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 80–க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தின் போது, டாஸ்மாக் கடையில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததாக கூறப்படுகிறது, இதில் சேதம் அடைந்த மதுபாட்டில்களின் மதிப்பு எவ்வளவு? என்று டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது.


Next Story