போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தம் பள்ளி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆய்வுகூட்டத்தில் கிருஷ்ணகிரி கலெக்டர் வலியுறுத்தல்


போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தம் பள்ளி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆய்வுகூட்டத்தில் கிருஷ்ணகிரி கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 10:01 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் மாநிலம் தழுவிய அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், ஓசூர் உதவிகலெக்டர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:– பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயங்காத நிலையில் தனியார் பஸ்கள் மற்றும் தனியார் வசம் உள்ள பஸ்களை கூடுதலாக பொதுமக்களின் தேவையை அறிந்து முக்கிய வழித்தடங்களில் இயக்க வேண்டும். தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வாங்கக்கூடாது. இதை வருவாய்த்துறை, காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

பள்ளி பஸ்கள்

தனியார் பள்ளி பஸ்களை கொண்டு முக்கிய வழித்தடங்களில் இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு வரும் போக்குவரத்து ஊழியர்களை தடுக்கும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், துணைபோலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாதவன், ராமச்சந்திரன் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story