காதல் திருமணம் செய்த நர்சை கொன்று உடல் எரிப்பு நயவஞ்சகமாக வரவழைத்து தீர்த்துக் கட்டிய தந்தை, அத்தை கைது
காதல் திருமணம் செய்த நர்சை கொலை செய்து, உடலை எரித்த தந்தை, அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வீராளம்பட்டியை சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன். இவருடைய மகள் சுகன்யா (வயது 21). இவர் ஈரோடு சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். அங்கு, ஈரோட்டை சேர்ந்த பூபதி (23) என்பவர் பெயிண்டராக வேலை பார்த்தார். அப்போது 2 பேருக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் தங்களது வீட்டாருக்கு பயந்து கடந்த ஜனவரி 19–ந்தேதி பெருந்துறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களின் திருமணத்தை பூபதியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சுகன்யாவின் வீட்டார் ஏற்கவில்லை.
திருவிழாவுக்கு அழைப்புஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதி வீராளம்பட்டியில் நடைபெற்ற ஊர் திருவிழாவுக்காக காதல் தம்பதியினரை வருமாறு சுகன்யாவின் குடும்பத்தினர் அழைத்தனர். அதை நம்பிய அவர்கள் அங்கு சென்றபோது ஊரின் எல்லையில் சுகன்யாவின் தந்தை உள்பட உறவினர்கள், பூபதியை மிரட்டி அனுப்பிவிட்டு சுகன்யாவை மட்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு சுகன்யா என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
பூபதி சேடப்பட்டி போலீசில், தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சுகன்யாவை ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை பெரியகார்த்திகேயனிடம் கூறினார். ஆனால் அவர் சுகன்யாவை ஒப்படைக்கவில்லை.
கொன்று எரிப்புஅத்துடன் சுகன்யா கொல்லப்பட்டதாக தகவல் பரவியதால், கிராம நிர்வாக அலுவலர் சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெரியகார்த்திகேயன், அவருடைய சகோதரர்கள் பாண்டிக்கண்ணன், சுந்தரம், சுகன்யாவின் அத்தை லட்சுமி ஆகியோர் சுகன்யாவை அவர்கள் வீட்டில் கொலை செய்து ஒரு ஓடையில் உடலை எரித்து தடயங்களை அழித்தது தெரியவந்தது.
அவரை கொலை செய்வதற்காகவே, திருவிழாவுக்கு வருமாறு நயவஞ்சகமாக அழைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மனித எலும்புகள் சிதறிக்கிடந்தன. தடயவியல் நிபுணர் குழுவினர் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
தந்தை கைதுஇதுதொடர்பாக சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன், அத்தை லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாண்டிக்கண்ணன், சுந்தரம் ஆகியோரை தேடி வருகின்றனர்.