பெரியகுளம் பகுதியில் மழை: வராகநதி ஆற்றில் நீர்வரத்து தொடங்கியது
பெரியகுளம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வராகநதி ஆற்றில் நீர்வரத்து தொடங்கியது.
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் வராகநதி ஆறு ஓடுகிறது. இந்த நதியின் தெற்கு பகுதி தென்கரை என்றும், வடக்கு பகுதி வடகரை என்றும் அழைக்கப்படுகிறது. பருவமழை முறையாக பெய்யாததால் ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
இதையொட்டி ஆற்றின் பல பகுதிகளில் கழிவுநீர் கலந்தது. மேலும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. இதன் காரணமாக ஆற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு கொசு உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. கழிவுநீரும், குப்பைகளும் தேங்கி நின்றதால் கூவமாக மாறியது.
பொதுமக்கள் மகிழ்ச்சிஇந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரியகுளம் மற்றும் கல்லாற்று பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வராகநதி ஆற்றில் நீர்வரத்து தொடங்கியது. இதையொட்டி ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. தற்போது ஆற்றில் மழை நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுவதில்லை.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் மொத்த உயரமான 126 அடியில் தற்போது 91.84 அடி தண்ணீர் உள்ளது. பெரியகுளம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.