பரோலில் வீட்டுக்கு வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் கல்லக்குடியை அடுத்த வடுகர்பேட்டை மாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் ராபின்சன் (வயது 41). இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். ரம்யா வெளிநாட்டில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். ராபின்சன் கரூர் மற்றும் ஈரோட்டில் வேலை பார்த்த போது 2004–ம்ஆண்டு ஈரோட்டில் நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இதனையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரோலில் வந்த அவர் திருச்சி பாலக்கரையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு பின்னர் வடுகர்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
தற்கொலை
கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்ததால் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு வீடு திரும்பினார். ரம்யா வெளிநாட்டில் இருப்பதால் ராபின்சன், மகள் சரண்யாவுடன் தனது அண்ணன் ஜான்சன் வீட்டில் உணவு அருந்திவிட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு படுக்க சென்றார். அப்போது மனைவியிடம் இருந்து போன் வந்ததால் தனது மகளை மனைவியிடம் பேச வைத்துவிட்டு, பின்னர் அவர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சரண்யா, ஜான்சன் வீட்டிற்கு தூங்குவதற்கு சென்றுவிட்டார். இரவு வெகுநேரமாக மனைவியிடம் செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டிருந்த ராபின்சன் திடீரென மனைவியின் துப்பட்டாவை எடுத்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ராபின்சன்னின் சத்தம் கேட்காததால் அவரது அண்ணன் மகன் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராபின்சன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு செட்ரிக் இம்மானுவேல், லால்குடி இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் கல்லக்குடி சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராபின்சன் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரோலில் வந்த ராபின்சன் ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வந்தார். ராபின்சன்னுக்கு கண்பார்வை கோளாறு, வயிற்றுவலி இருந்து வந்ததால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராபின்சன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரது பிரேத பரிசோதனையானது நீதிபதி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற வேண்டும். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.