பாதாள சாக்கடையில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது வி‌ஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி


பாதாள சாக்கடையில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது வி‌ஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 14 May 2017 4:04 AM IST (Updated: 14 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடையில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற 2 மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை,

பாதாள சாக்கடையில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற 2 மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்போன் விழுந்தது

மும்பை குர்லா, ஹலாவ்புல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 23). இவரது நண்பர் பவாயில் உள்ள துங்கா விலேஜ் பகுதியை சேர்ந்த சச்சின் (21). 2 பேரும் மும்பை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். மேலும் தனியாருக்கு சொந்தமான பகுதியிலும் துப்புரவு வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று 2 பேரும் சாக்கிநாக்கா, ஸ்ரீநகர் பகுதியில் உள்ள கேண்டீன் சாக்கடை குழாயை சுத்தம் செய்ய சென்றனர். அப்போது இவர்கள் கொண்டு வந்து இருந்த இரும்பு கம்பி ஒன்று பாதாளசாக்கடைக்குள் விழுந்தது. எனவே அஜய் குனிந்து சாக்கடைக்குள் பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சட்டைபையில் இருந்த செல்போனும் சாக்கடைக்குள் விழுந்தது.

வி‌ஷவாயு தாக்கியது

இதையடுத்து அவர் பாதாளசாக்கடைக்குள் இறங்கி செல்போனை தேடினார். அப்போது சாக்கடைக்குள் வி‌ஷவாயு தாக்கி அஜய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே அவர் உதவி கேட்டு அலறினார். எனவே அவரை காப்பாற்ற சச்சினும் சாக்கடைக்குள் இறங்கினார். ஆனால் சச்சினும் வி‌ஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினார். இந்தநிலையில் சாக்கடைக்குள் இருந்து சத்தம் வருவதை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதாளசாக்கடைக்குள் சிக்கி இருந்த 2 துப்புரவு தொழிலாளர்களையும் மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

2 பேரும் பலி

இதில் சச்சினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாக்கிநாக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story