போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பெங்களூரு-தமிழகம் இடையே பஸ் சேவையில் பாதிப்பு இல்லை


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பெங்களூரு-தமிழகம் இடையே பஸ் சேவையில் பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பெங்களூரு-தமிழகம் இடையே பஸ் சேவையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

பெங்களூரு,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக 15-ந் தேதி (நேற்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. நேற்று முன்தினம் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் முன்கூட்டியே போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இவர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

பாதிப்பு இல்லை

இந்த போராட்டம் நடந்தாலும் பெங்களூரு-தமிழகம் இடையேயான தமிழக அரசு பஸ் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் மாலையில் தமிழகத்தில் இருந்து புறப்பட்ட தமிழக அரசு பஸ்கள் நேற்று காலையில் பெங்களூரு சாந்தி நகர் பஸ் நிலையத்துக்கு வந்தன. இந்த பஸ்கள் நேற்று மாலையில் மீண்டும் பெங்களூரு சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் புறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றன.

இதேபோல், பெங்களூரு சேட்டிலைட் பஸ் நிலையத்திற்கு வழக்கத்தை விட குறைவான அளவில் நேற்று தமிழக அரசு பஸ்கள் வந்து புறப்பட்டு சென்றன. பெங்களூரு-தமிழகம் இடையே நேற்று தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சென்ற பயணிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.


Related Tags :
Next Story