குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது கரூர் நகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட ஆட்சிமங்கலம் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு உள்ள ஆழ் குழாய் கிணற்று மோட்டார் பழுதாகி 3 மாதம் ஆகிறது. இதை சரி செய்யக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

இதேபோன்று அரவக்குறிச்சி செல்வநகர் பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீருக்கு பல இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சின்னதாராபுரம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த சீதா என்ற பெண் தன் மகனுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், நிலத்தகராறு காரணமாக கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த எனது தாய் லட்சுமியை பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் அரிவாளால் வெட்டி விட்டார். இதில் தனது தாய் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நான் கொடுத்த புகார் மனுவை பதிவுகூட செய்யவில்லை. எனவே தனது தாயை அரிவாளால் வெட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதுபானக்கடையை அகற்ற கூடாது

அரவக்குறிச்சி கார்வழி பகுதியை சேர்ந்த ஆண்கள் பலர் ஒன்றாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கார்வழியில் ஒரு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையால் பொதுமக்கள் யாருக்கும் தொந்தரவு இல்லை. ஆனால் ஒரு சிலர் அவர்களது சுய லாபத்திற்காக இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த கடையை அகற்றிவிட்டால் நாங்கள் மதுபானம் வாங்க 40 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். எனவே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபானக்கடையை அகற்றக்கூடாது என்று கூறியுள்ளனர். இதேபோன்று நேற்று ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


Next Story