ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து: 4 குடிசைகள் எரிந்து சாம்பல்; மூதாட்டி கருகி சாவு


ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து: 4 குடிசைகள் எரிந்து சாம்பல்; மூதாட்டி கருகி சாவு
x
தினத்தந்தி 17 May 2017 4:45 AM IST (Updated: 17 May 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ஒரு குடிசையில் இருந்த மூதாட்டி உடல் கருகி இறந்தார். தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவர் தனது வீட்டின் மேல் தளத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த 3 வீடுகளின் சுவர்கள் சிமெண்டால் கட்டப்பட்டது. ஆனால் மேற்கூரை கீற்றுக்கொட்டகையால் ஆனதாகும். இந்த குடிசைகளில் ஒன்றில் பத்மாவதி (வயது 76) என்பவர் தனியாக வசித்து வந்தார். மற்றொரு குடிசையில் ஆட்டோ டிரைவர் லட்சுமணன், அவரது மனைவி சித்ரா மற்றும் குழந்தைகளும், இன்னொரு குடிசையில் காய்கறி கடை வியாபாரி முருகதாஸ், தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முருகதாஸ் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

இதேபோல ஆட்டோ டிரைவர் லட்சுமணனின் குழந்தைகள் பள்ளி விடுமுறைக்கு வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஆட்டோ டிரைவர் லட்சுமணன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதேபோல காலை 7.15 மணி அளவில் அவரது மனைவி சித்ராவும் வீட்டு வேலை செய்வதற்காக வெளியே சென்று விட்டார்.

தீப்பிடித்து எரிந்தது

இந்த நிலையில் காலை 7.30 மணி அளவில் இந்த குடிசைகளில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென வேகமாக எரியத்தொடங்கியது. இதில் வீட்டில் வசித்து வந்த பத்மாவதி தீயில் சிக்கினார்.அப்போது அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினார். பக்கத்து வீடுகளில் ஆட்கள் இல்லாததால் அவரது அலறல் சத்தம் பயனற்று போனது. இதற்கிடையில் தீ வேகமாக 3 குடிசைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது மூதாட்டி பத்மாவதி மேலும் சத்தம் எழுப்பினார். அவரால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தீ விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து மூதாட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையில் தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம், கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடன் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

மூதாட்டி கருகி சாவு

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தீயில் சிக்கிய மூதாட்டி பத்மாவதி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த பின் மூதாட்டியின் உடலை கரிகட்டையாக மீட்க முடிந்தது. தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு குடிசையில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் சிலிண்டரில் பாதி பாகம் சுவரை துளையிட்டு வீட்டின் மறுபக்கமும், மற்றொரு பாகம் மேலே பறந்து வந்து சாலையிலும் விழுந்தன. மேலும் 2 சிலிண்டர்கள் தீயில் கருகி இருந்தன. அந்த சிலிண்டர்கள் யாருடைய வீட்டினுடையது என்பதை உடனடியாக அறிய முடியவில்லை. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள பூபாலன் என்பவர் குடிசையிலும் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீயையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

போலீசார் விசாரணை

குடிசைகளில் தீப்பிடித்து எரிந்த போது அருகில் வீட்டில் வசித்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் மாடிப்பகுதியில் வசித்து வந்தவர்களும் தெருப்பகுதிக்கு வந்தனர். தீ விபத்தில் 3 குடிசைகளிலும் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. பூபாலன் குடிசையில் தீப்பிடித்தது எரிந்ததிலும் பொருட்கள் சேதமடைந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், மாநகராட்சி உதவி கமிஷனர் ரெங்கராஜ், செயற்பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக அறியமுடியவில்லை. 4 குடிசைகள் எரிந்ததில் ரூ.10 லட்சம் மதிப்பு வரை சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

உயிர் தப்பினர்

தீப்பிடித்த போது பத்மாவதி மட்டும் தீயில் சிக்கி பலியானார். அவரது குடிசையின் அருகில் வசிக்கும் லட்சுமணன், முருகதாஸ் குடும்பத்தினர் அப்போது இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த தீ விபத்தால் ஸ்ரீரங்கத்தில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story