அரியலூர் மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


அரியலூர் மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்,

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் அரசுபஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பெரும்பாலான பஸ்கள் துறைமங்கலம் கிளை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

2-வது நாளாக வேலைநிறுத்தம்

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் துறைமங்கலம் கிளை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்களை மாற்று டிரைவர்கள் மூலம் இயக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து கழக நிர்வாகம் இறங்கியது.இந்த பணிமனையில் இருந்து 110 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்கள், டவுன் பஸ்கள் ஆகியவை மாற்று டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

இதனால் பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசு பஸ் மூலம் போக்குவரத்தினை மேற்கொண்டதை காணமுடிந்தது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பெரம்பலூர் கிளை பணி மனையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் பாலக்கரை முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரசு பஸ் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் இருந்து மாற்று டிரைவர்கள் மூலம் 30 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் அரியலூர் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அரியலூர் கல்லங்குறிச்சி போக்குவரத்து கழக கிளை பணிமனையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மினி பஸ்கள்

இந்நிலையில் சில பஸ்கள் மட்டும் மாற்று டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்கள் மற்றும் மினிபஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசுபஸ் ஊழியர்கள் போராட்டம் எதிரொலியாக அரியலூர் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. கிராம புறங்களில் அரசு பஸ்கள் செல்லாததால் மக்கள் வெளிஇடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மினிபஸ்களை நீண்ட தூரம் இயக்க அதிகாரிகள் அனுமதி அளித்ததால் பெரம்பலூர், செந்துறை, முட்டுவாஞ்சேரி, வேப்பூர், கொளக்காநத்தம் போன்ற ஊர்களுக்கு அதிகளவில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம்

7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தலையில் முக்காடு போட்டு ஜெயங்கொண்டம் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொ.மு.ச. செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார். சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து கட்சி தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story