சிவமொக்காவில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதல் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி


சிவமொக்காவில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதல் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் சிவமொக்காவில் ‘ரான்சம்வேர்‘ வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

உலகில் 150-க்கும் அதிகமான நாடுகளில் ‘ரான்சம்வேர்‘ வைரஸ் பரவி வருகிறது. அதாவது கணினிகளில் இந்த வைரசை புகுத்தி, தகவல்களை திருடுவது தான் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் பணம் கேட்டு மிரட்டப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒரு சில இடங்களில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. சிவமொக்கா கோபால் கவுடா லே-அவுட்டில் வசித்து வரும் ஒரு தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் அர்ஜூன் என்பவரின் மடிக்கணினியில் அந்த வைரஸ் ஊடுருவியுள்ளது. அந்த கணினியின் தகவல் உரையாடல் பகுதியில், கணினியை முடக்கியுள்ளவர்கள் ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்.

பணம் கிடைக்கவில்லை

அதில் உங்கள் கணினி மீண்டும் வேலை செய்ய வேண்டுமென்றால் “பிட் காயின்“(டிஜிட்டல் ரூபாய் வடிவத்தில்) 600 டாலர் (அதாவது ரூ.40 ஆயிரம்) வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை படித்தவுடன், இதுபற்றி சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் அர்ஜூன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வைரஸ் பீதியால் பெங்களூருவில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு உள்ளன. திறக்கப்பட்டுள்ள சில ஏ.டி.எம். மையங்களிலும் பணம் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் சில நாட்கள் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வைரஸ் தாக்குதல் பீதி

500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு ஏ.டி.எம். மையங்களில் எந்த நேரமும் பணம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டது. பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைப்பது குறைந்துவிட்டது. இந்த நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் பீதி காரணமாக ஏ.டி.எம்.களில் வங்கிகள் பணம் வைப்பதை குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை வங்கிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஏ.டி.எம்.களில் பணம் வைக்கப்படாததற்கு இந்த வைரஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.


Next Story