கனிம சுரங்க முறைகேடு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது


கனிம சுரங்க முறைகேடு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் கங்காராம் படேரியா. இவர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு கனிமத்துறை இயக்குனராக பொறுப்பு வகித்தார். அப்போது இவர், ‘ஜந்தகல்‘ எனும் கனிமம் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கோயலுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகாவில் உள்ள கனிம சுரங்கத்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக முன்னாள் லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, கனிம சுரங்க முறைகேட்டில் கங்காராம் படேரியாவுக்கு தொடர்பு இருப்பதும், இதற்காக அவருடைய மகன் ககன் படேரியாவின் வங்கி கணக்கில் வினோத் கோயல் ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கைது

இந்த நிலையில், கனிம சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு கங்காராம் படேரியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் காலையில் லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணிநேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவரை லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.

பின்னர், அவரை மாலையில் பெங்களூரு கோர்ட்டில் விசாரணை குழுவினர் ஆஜர்ப் படுத்தினர். மேலும், போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரிக்க விசாரணை குழுவினர் கோர்ட்டில் அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற 18-ந் தேதி வரை கங்காராம் படேரியாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ஐ.ஜி. சரண்ரெட்டி

இதுகுறித்து, லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு ஐ.ஜி. சரண்ரெட்டி கூறுகையில், ‘ ‘ஜந்தகல்‘ நிறுவனத்துக்கு கனிம சுரங்க ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய போலி ஆவணங்கள் மூலம் கங்காராம் படேரியா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரைக்காக அவருடைய மகன் ரூ.10 லட்சத்தை லஞ்சமாக வினோத் கோயலிடம் இருந்து பெற்றுள்ளார். இந்த முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் கங்காராம் படேரியா கைது செய்யப்பட்டு உள்ளார்‘ என்றார்.

இந்த விவகாரத்தில் மேலும் சில அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளனர். அத்துடன், இந்த முறைகேடு கடந்த 2007-ம் ஆண்டு நடந்துள்ளதால், அப்போது கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமியிடமும் விசாரணை நடத்த லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Related Tags :
Next Story