கடையை மூடக்கோரி மதுக்கடை பாரில் அமர்ந்து பெண்கள் போராட்டம்
மதுக்கடையை மூடக்கோரி பாரில் பெண்கள் உள்பட பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்
செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை அருகே கடந்த மாதம் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக அந்த மதுக்கடை தொடர்ந்து அந்த பகுதியில் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று 100–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், பால்பண்ணை அருகில் உள்ள அந்த மதுக்கடை மற்றும் ‘பாரை’ மூடக்கோரி மதுக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடை அருகில் உள்ள ‘பாருக்கு’ சென்று அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுக்கடை மற்றும் ‘பாரை’ மூடும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம், இங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் அறிவித்தனர்.
கடை மூடல்இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்–இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்ததால் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மதுக்கடையை மூட டாஸ்மாக் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த மதுக்கடை மூடப்பட்டது.