மழைவேண்டி பால்குட ஊர்வலம் அணியாரில் வருண ஜெபம் நடந்தது


மழைவேண்டி பால்குட ஊர்வலம் அணியாரில் வருண ஜெபம் நடந்தது
x
தினத்தந்தி 18 May 2017 3:10 AM IST (Updated: 18 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று மழை வேண்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதேபோல் நாமக்கல் அருகே உள்ள அணியாரில் வருண ஜெபம் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதையொட்டி நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து இந்த ஊர்வலத்தை கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் திருப்பாகுளத் தெரு, கோட்டை மெயின் ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், கிருஷ்ணன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருண ஜெபம்

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள அணியார் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று மழைவேண்டி வருண ஜெபம் நடந்தது. இதையொட்டி 5 பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிய அர்ச்சகர்கள் அதில் அமர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த சிறப்பு வழிபாடு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story