திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்


திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 18 May 2017 4:00 AM IST (Updated: 18 May 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மயிலாடுதுறை எம்.பி. பாரதிமோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தயாளன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையை மாற்று வதற்காக திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 11 சிவாச்சாரியார்கள் நாகநாதருக்கு 108 திரவியங்களால் 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை, பர்ஜன்ய சாந்தி வருணஜெப வேள்வி, நந்திபெருமானுக்கு நீர்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர்நிரப்பி வழிபட்டனர். ஓதுவார்கள் மழை வேண்டி பதியம் ஓதினார்கள் சிவபெருமானுக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர் விழச்செய்து வழிபாடு நடத்தினர். நாகநாதருக்கு மகாருத்திர அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், நகர செயலாளர் சிங்காரவேலு, ஒன்றிய அவைத் தலைவர் டி.எஸ்.செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கரு.முத்துராமலிங்கம், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் வைரவேல், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் வி.கே.பாலமுருகன், அ.தி.மு.க. நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் செய்திருந்தனர்.

சுவாமிநாதசுவாமி கோவில்

இதேபோல் மழை நன்கு பெய்து வறட்சி நீங்க வேண்டி முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் மற்றும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில் எனும் கபர்தீஸ்வரர் கோவிலில் நேற்று வருண ஜெபவேள்வி வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சுந்தரேஸ்வரருக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீரை விழச்செய்து வழிபாடு நடத்தினர். மேலும் சுந்தரேஸ்வரருக்கு மகாருத்ர அபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில் என அழைக்கப்படும் கபர்தீஸ்வரர் கோவிலில் கபர்தீஸ்வரருக்கு கபர்தீஸ்வரன் சிவாச்சாரியார் தலைமையில் 3 சிவாச்சாரியார்கள் சிறப்பு வருணயாகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தினர்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், பால்வள கூட்டுறவு சங்க தலைவர் என்.ஆர்.வி.எஸ்.செந்தில், சுவாமிமலை பேரூராட்சி செயலாளர் ரங்கராஜன்,

தாராசுரம் பேரூராட்சி செயலாளர் கேசவன், சோழபுரம் பேரூராட்சி செயலாளர் ஆசாத்அலி

அறநிலையத்துறையின் கும்பகோணம் உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story