மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பூத்துறையில் 500 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யும் சிக்கியது.

குழித்துறை,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், பறக்கும்படை தாசில்தார் ஜாண் அலெக்சாண்டர் தலைமையில், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதா கிருஷ்ணன், ஜாண் பிரைட் ஆகியோர் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே அதிகாரிகள் காரை விரட்டி சென்றனர்.

800 கிலோ அரிசி பறிமுதல்

சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்தி சென்று மார்த்தாண்டத்தில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்த போது, அதில் மூடைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து, காருடன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், காரில் இருந்த கேரளாவை சேர்ந்த அனிஷ், கணேஷ் ஆகிய இருவரை அதிகாரிகள் பிடித்து நாகர்கோவிலில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காப்புக்காடு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

மண்எண்ணெய் பறிமுதல்

இதுபோல், பூத்துறை பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே அதிகாரிகள், காரை விரட்டி சென்றனர். நித்திரவிளை பகுதியில் சென்ற போது டிரைவர், காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார்.

அதிகாரிகள், காரை சோதனை செய்த போது அதில் 500 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது. அந்த மண்எண்ணெய்யை அதிகாரிகள் காருடன் பறிமுதல் செய்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story