காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குத்தாலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி தீர்ப்பாய தீர்ப்பை காலாவதி செய்யும் ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை மத்திய அரசு உடனே திரும்பபெற வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒருவாரம் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 4-வது நாளான நேற்று குத்தாலத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரை சென்ற சிறப்பு பயணிகள் ரெயில் நேற்று பகல் 12.25 மணிக்கு குத்தாலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் குடந்தை அரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மற்றும் விவசாயிகள் பயணிகள் ரெயிலை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story