சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் மரக்கன்று நட மானியம் கலெக்டர் தகவல்


சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் மரக்கன்று நட மானியம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 May 2017 4:15 AM IST (Updated: 25 May 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் மரக்கன்று நட மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கூறியுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்ட நிலத்தில் மருத்துவ குணம் உள்ள மூலிகை பயிர்களை பயிர் செய்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமும், சாத்தூர் சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாயில் வேளாண்மை துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு வண்டல் மண், சவடுமண், கிராவல் போன்ற கனிமங்களை இலவசமாக வினியோகம் செய்யும் பணியும் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் மருத்துவ குணம் உள்ள ஆவாரம் பூ, நித்திய கல்யாணி, அவுரி போன்ற மூலிகை பயிர்களை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் விதைகள், இலைகளை அறுவடை செய்து நல்ல வருமானம் பெற முடியும். இந்த மூலிகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. இந்த மூலிகை பயிர்களை ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் உட்கொள்வதில்லை. மேலும், தேசிய மூலிகை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அவுரி மற்றும் நித்திய கல்யாணி ஆகிய மூலிகை பயிர்களின் விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மானியத்தில் மரக்கன்று

வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு மரக்கன்றுகள் 1 எக்டேருக்கு ரூ.17ஆயிரம் மானியத்திலும், புங்கை மரக்கன்றுகள் 1 எக்டேருக்கு ரூ.20ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகிறது. ஆகையால் விவசாயிகள் இதனை பெற்று சீமை கருவேல மரங்களை அகற்றிய இடங்களில் நட்டு வைத்து பயன் பெறுங்கள். இவ்வாறு அவர் கூறினார். சிறுக்குளம் கண்மாய் கரை ஓரத்தில் தோட்டக்கலை துறை மூலமாக நீர் பாசன முறையை பயன்படுத்தி பழமரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார்.

முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அசோலா கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்த செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள், கால்நடைதுறை இணை இயக்குனர்(பொறுப்பு) சிவராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியராய், சாத்தூர் தாசில்தார் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story