மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு: தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 May 2017 3:30 AM IST (Updated: 31 May 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, 7–வது வார்டு சின்னப்பாலம் பகுதியில் புதிதாக அரசு மதுபானக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து அரசு மதுபானக்கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) அந்த இடத்தில், மதுபானக்கடை திறக்கப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள், தாசில்தார் வெளியே சென்றிருப்பதாக கூறினர்.

பெண்கள் முற்றுகை

இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த துணை தாசில்தார்கள், ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை போராட்டம் நடந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், கலாராணி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே தாசில்தார் குமார் அங்கு வந்தார். அவரிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், மதுபானக்கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story