வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது


வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 31 May 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளத்தை அடுத்த முகிலன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், டெம்போ டிரைவர். இவருடைய மனைவி இந்திரா (வயது 33). நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் இந்திரா மட்டும் தனியாக இருந்தார். அப்போது, கீழ முகிலன் குடியிருப்பை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான ராஜன் (24) என்பவர் அங்கு வந்தார்.

அவர் டெம்போவில் பாரம் ஏற்றும் இடம் பற்றி இந்திராவிடம் கேட்டார். அதற்கு அவர், தனது கணவர் வெளியே சென்று இருப்பதாகவும், அவர் வந்தவுடன் அதுபற்றி கேட்கும்படி கூறினார்.

கத்திக்குத்து

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்திராவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இந்திரா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திராவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி இந்திரா தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய ராஜனை கைது செய்தார்.


Related Tags :
Next Story