விராஜ்பேட்டையில் கடைகளில் புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது கஞ்சா விற்பனை செய்ததும் அம்பலம்


விராஜ்பேட்டையில் கடைகளில் புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது கஞ்சா விற்பனை செய்ததும் அம்பலம்
x
தினத்தந்தி 1 Jun 2017 2:00 AM IST (Updated: 1 Jun 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

விராஜ்பேட்டையில் கடைகளில் புகுந்து திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது.

குடகு,

விராஜ்பேட்டையில் கடைகளில் புகுந்து திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது.

தனிப்படை அமைப்பு

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா, குசால்நகர், பொன்னம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை ஒரு கும்பல் திருடி சென்றது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த திருட்டில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மகும்பலை தேடிவந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னம்பேட்டை போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 3 வாலிபர்கள் வந்து கொண்டு இருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்கு முன் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் குடகு மாவட்டம் மடிகேரி அருகே உள்ள ஜெயண்டனே பகுதியை சேர்ந்த முஸ்தபா(வயது 20), விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் சித்தப்பா(23), துமகூருவை சேர்ந்த சதீஷ் (33) என்பது தெரிந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து சித்தாப்புரா, குசால்நகர், பொன்னம்பேட்டை, ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கடைகளில் புகுந்து திருடியதும் தெரியவந்தது.

கஞ்சா விற்பனை

மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து குடகு மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரொக்கம், ரூ.17 ஆயிரத்து 300 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.60 லட்சம் ஆகும். இதுகுறித்து பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story