அமைச்சர் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அமைச்சர் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம்  பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 Jun 2017 4:00 AM IST (Updated: 1 Jun 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்ஜமின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு காரில் புறப்பட்டு செல்ல முயன்றார். அமைச்சர் காரில் ஏற முயன்றபோது கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்த கடம்பத்தூரை அடுத்த விடையூரை சேர்ந்த கர்னல்குமார்(23) தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அமைச்சர் முன்பு நடந்த இந்த சம்பவம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து போலீசார் கர்னல்குமாரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதன் எதிரொலியாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து உள்ளே அனுப்பினர். மேலும் உள்ளே வரும் நபர்களை முழுமையாக பரிசோதித்து அவர்கள் கொண்டு வரும் கைப்பை மற்றும் பொருட்களை தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.



Next Story