இலவச அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு கிரீன்கார்டு


இலவச அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு கிரீன்கார்டு
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

இலவச அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு கிரீன்கார்டு நாராயணசாமி உறுதி

புதுச்சேரி,

இலவச அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு கிரீன்கார்டு வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை சட்டசபையில் கேள்வி–பதில் நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–

நேரடி மானியத்தொகை

அன்பழகன்: புதுவை மாநிலத்தில் எத்தனை குடும்பங்களுக்கு இலவச அரிசி மாநில அரசால் வழங்கப்படுகிறது? அதற்காக ஆகும் செலவு ஓர் ஆண்டிற்கு எவ்வளவு? தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நேரடி மானியத்தொகை புதுச்சேரி மாநிலம் முழுவதும் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டது?

அமைச்சர் கந்தசாமி: அனைத்து ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக தற்போதைய ஒப்பந்த விலைப்படி ஓர் ஆண்டிற்காக தோராயமாக ரூ.252 கோடி செலவாகும். ஒரு மாதத்திற்கு ரூ.21 கோடி. கடந்த 2016–17 ஆம் ஆண்டிற்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 6 லட்சத்து 864 நபர்களுக்கு மத்திய அரசின் நேரடி மானியத்தொகை அவரவர் உணவு பங்கீட்டு அட்டையின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015–16 ஆம் ஆண்டிற்கு செப்டம்பரில் திட்டம் புதுச்சேரியில் செயல்பட தொடங்கியதிலிருந்து மத்திய அரசு ரூ.46 கோடியே 63 லட்சத்து 51 ஆயிரத்து 368 நிதி வழங்கியுள்ளது.

ரூ.40 கோடி இழப்பு

அன்பழகன்: அரிசிக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது?

அமைச்சர் கந்தசாமி: இப்போது ரூ.29.60 வழங்கப்படுகிறது. இந்திய உணவுக்கழகத்திடமிருந்து ரூ.25.36–க்கு அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

அன்பழகன்: கிலோவுக்கு ரூ.5 கோடி கூடுதல் கொடுத்தது அவசியம்தானா? இதனால் ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இது வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்கப்பட்டது. பழைய ஆட்சி மாதிரி நாங்கள் யாரிடமும் பேசவில்லை.

கிரீன்கார்டு

அன்பழகன்: கடந்த ஒரு வருடத்தில் 5 மாதம்தான் இலவச அரிசி போடப்பட்டுள்ளது. அரிசிக்கான மீதி மாத பணத்தை வங்கியில் போட்டிருக்கலாம். மத்திய அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பணம் தருபவர்களுக்கும் அரிசி தரப்படுகிறது. இந்த அரசின் திட்டம்தான் என்ன? உங்களிடம் சரியான ஆளுமை இல்லை. வீணாக செலவு செய்துவிட்டு நிதிப்பற்றாக்குறை என்று பேசாதீர்கள்?

(இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரின் மைக் இணைப்பினையும் துண்டிக்க உத்தரவிட்ட சபாநாயகர் முதல்–அமைச்சரை பேச அழைத்தார்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இலவச திட்டங்கள் தொடர்பாக வசதி உள்ளவர்கள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தாங்களாக முன்வந்து இலவச அரிசி வேண்டாம் என்று கூறினால் அவர்களுக்கு கிரீன்கார்டு கொடுப்பதாக தெரிவித்திருந்தேன். அதை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

அமைச்சர் கந்தசாமி: இலவச அரிசி திட்டத்துக்கு ரூ.252 கோடி செலவாகிறது. அதில் ரூ.46 கோடியை மத்திய அரசு தருகிறது. இந்த திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story