அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு போலீசில் புகார்


அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு போலீசில் புகார்
x
தினத்தந்தி 31 May 2017 10:45 PM GMT (Updated: 31 May 2017 9:15 PM GMT)

தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது42). இவர் கண்ணந்தங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர். இவர் தற்போது தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் வசித்து வருகிறார்.

ஜெயக்குமார் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு காரை அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று காலை ஜெயக்குமார் காரை எடுப்பதற்காக வந்தார்.

போலீசில் புகார்

அப்போது காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் பின் பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரின் டயர்கள் ஆணியால் குத்தப்பட்டு பஞ்சரான நிலையில் இருந்தது.

இது குறித்து ஜெயக்குமார் தஞ்சை நகர மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story