பா.ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகள் ‘லாலிபாப்’ ஆகிவிட்டது சிவசேனா கடும் தாக்கு


பா.ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகள் ‘லாலிபாப்’ ஆகிவிட்டது சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 1 Jun 2017 3:20 AM IST (Updated: 1 Jun 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ‘லாலிபாப்’ ஆகிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

பா.ஜனதா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ‘லாலிபாப்’ ஆகிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

நம்பிக்கை இழப்பர்

இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

வெறும் தேர்தல் மாயஜாலத்துக்காக வாக்குறுதிகளை அள்ளிவீசினால், பொதுக்கூட்டங்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவர். பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய வாக்குறுதிகள் வெறும் ‘லாலிபாப்’ (ஒருவகை இனிப்பு பண்டம்) ஆக மாறிவிட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நரேந்திர மோடி அரசு பொதுமக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குகின்றது. அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பயிர்க்கடன் தள்ளுபடி சாத்தியம் இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார். மினுக்கி பேசாமல், உண்மையை மட்டுமே பேசுவார் என்று நிதின் கட்காரிக்கு நற்பெயர் இருக்கிறது.

சாத்தியமாகாது

நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினோம். ஆனால், இப்போது இது சாத்தியமாகாது. எல்லாருக்கும் ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு வழங்கி விட முடியாது என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் கடுமையான உண்மையை பேசியிருக்கிறார்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story