சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழி காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மகன் சேகர் (வயது 47). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சேகருடன் கோபித்துக் கொண்ட அவருடைய மனைவி தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டு சென்று விட்டார். இதனால் சேகர் தனது தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சேகரின் தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உதவி செய்து வந்தார். அந்த சிறுமியை சேகர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சேகர் அந்த சிறுமிக்கு மிரட்டல் விடுத்தார்.
குழந்தை பிறந்ததுஇதனால் அந்த சிறுமி தனக்கு நடந்த துயர சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தார். இதற்கிடையில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியானார். இதை அறிந்த அவருடைய பெற்றோர் இதற்கு யார்? காரணம் என்று கேட்டபோது, உண்மையை சிறுமி தெரிவித்தார். இது பற்றி சிறுமியின் பெற்றோர் சேகரிடம் கேட்ட போது, அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து சிறுமியின் தாய் கடந்த 9–7–2015 அன்று நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
இதற்கிடையே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சிறுமிக்கும், சேகருக்கும் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில், சேகர் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என அறிக்கை வந்தது. இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது இந்த மரபணு பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி தாக்கல் செய்திருந்தார்.
10 ஆண்டு சிறை தண்டனைஇவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சேகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.